நரை, திரை, மூப்பு அணுகாமல் என்றும் நோயணுகாமல் இளமையாக வைத்திருக்க உதவும் மூலிகைகளை காயகற்ப மூலிகை என்கிறோம். காயகற்ப மூலிகைகளில் மிக முக்கியமான இடத்தை பிடிப்பது நெல்லிக்கானியாகும். நெல்லிக்காய் நம் உடலில் தோன்றும் நஞ்சுகளை வெளியேற்றி இளமையாக இருக்க வழி செய்கின்றது. உடல் திசுக்களுக்கு புத்துணர்ச்சியளித்து உடல் செல்கள் நன்கு செயற்பட உதவி புரிகிறது. நெல்லிக்காயில் விற்றமின் சில வேறு எந்த வகை காய்கறி, பழங்களிலும் இல்லாத அளவிற்கு 600 மில்லிகிராம் உள்ளது. கல்சியம் 50 மில்லிக்கிராம், பொஸ்பரசு 20 மில்லிகிராம், இரும்புச் சத்து 1.2 மில்லிக்கிராமும் உள்ளது. அப்பிள் பழத்தினைவிட இது அதிக சக்தி வாய்ந்ததாகும். நெல்லிக்காய் ஈரலைத் தூண்டி நன்கு செயற்பட வைத்து கழிவுகளை வெளியேற்ற உதவுகின்றது. ஜீரண சக்தியை அதிகரித்து தாதுக்களை நம் உடல் ஏற்றுக்கொள்ள துணை புரிகின்றது. கண்களுக்கு தெளிவை கொடுக்கின்றது. தலைமுடி உதிராமல் வளர்ந்து நரைமுடி தோன்றுவதை தவிர்க்கின்றது. நரம்பு மண்டலத்தைத் தூண்டி வேலை செய்கிறது. மூளை செல்களுக்கு புத்துணர்ச்சியளிப்பதால் மனத்தெளிவு, புத்திக்கூர்மை மற்றும் ஞாபக சக்தி உண்டாகிறது. நுரையீரலை பலப்படுத்தி சுவாச நோய்களை கட்டுப்படுத்த உதவுகின்றது. உடல் எடையைக் கூட்டாமல் தசைகளுக்கு பலம் அளிக்கக் கூடிய தன்மை நெல்லிக்காய்க்கு உண்டு. நீரிழிவை கட்டுப்படுத்தும் சக்தியாகவுள்ளது. மேலும் இதில் விற்றமின் சி சத்து அதிகம் உள்ளதால் நோய்களுக்கு எதிர்ப்பு சக்தியாகவும் செயல்ப்படுகின்றது. நெல்லிக்காய் கிடைக்காத காலங்களில் காய்ந்த நெல்லிக்காயை பயன்படுத்தலாம். இதற்குரிய சக்தி காய்ந்த பின்னும் நெல்லிக்காயில் குறைவதில்லை. எல்லா வயதினரும் இதைச் சாப்பிட வேண்டும். குழந்தைகளுக்கு நெல்லிக்காய் லேகியம் தினம் கொடுக்க சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி உருவாவதுடன், மூளை வளர்ச்சியும், புத்திக்கூர்மையும் ஏற்படும். ஆயுர்வேத சக்தி மருந்து நெல்லிக்காயால் தான் தயார் செய்யப்படுகின்றது.
|
